WEB BLOG
this site the web

"கை"யறுநிலை!!!


சென்னையில் வசிக்கும் தோழி ஒருவரின் நான்கு வயது குழந்தை மரண செய்தியை ஒரு சில வாரங்களுக்கு பின்னே அறிந்த நான் துக்கம் விசாரிக்க சென்றேன்.நான் ஆரம்பிப்பேன் என அவரும், எப்படி ஆரம்பிப்பது என நானும் இருந்தோம். எந்த நேரமும் அவர் பெருங்குரல் எடுத்து அழக்கூடிய அபாயம் இருந்தது. வீட்டில் நிலவிய கனத்த மௌனத்தை உடைக்க நான் எதை எதையோ பேசி விட்டு கிளம்பி வந்தேன். கடைசி வரை எதற்காக சென்றேனோ அதை பற்றி பேசாமல் கிளம்பி வரும்படி ஆயிற்று. இந்த மாதிரியான சமயங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய தெளிவு இல்லாமல் இருந்தது கண்டு எனக்கே வெட்கமாக இருந்தது. வரும் வழியில், நடந்த துக்கத்தில் நானும் பங்கெடுப்பதாய் குறுஞ்செய்தி அனுப்பினேன்.நன்றி சொல்லி பதில் வந்தது.

சில சமயம் பிரிவுகள் தாங்கவொண்ணா துயரத்தையும், வேறு ஒன்றால் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தையும் விட்டு செல்வதாக தோன்றும். பிரிவுகளை சிலர் எதிர்கொள்ளும் முறை என்னை பல சமயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நான் மதுரையில் இருந்த போது அறிமுகமானவன் தாஸ். ஒல்லியான கருத்த கண்ணாடி போட்ட உருவம். மதுரை வட்டார மொழியில் சொல்லுவதென்றால் "மாக்கான்" போல இருப்பான். மதுரை மண்ணுக்கே உரிய "லந்துகளுக்கும்" சொந்தக்காரன். உலகத்தில் உள்ள அத்தனை சந்தோசத்துக்கும் குத்தகைகாரன். உனக்கு கவலையே வராதா தாஸ்? - இது அவனை அடிக்கடி பார்த்து கேக்கும் கேள்வி.கொஞ்ச நாட்களிலேயே என்னுடைய உலகம் அவனோடு என்றாகிப் போனது. அவனை பற்றி மட்டும் இரண்டு இடுகை போடலாம்.

ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் நாங்கள் உணவுக்காக காத்திருந்த வேலையில், ஒரு ஜோடி எங்கள் பக்கத்துக்கு மேஜையில் வந்து அமர்ந்தது. நங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் தாஸ் பில்-ஐ எடுத்து கொண்டு அந்த ஜோடி இருந்த மேஜையில் வைத்து விட்டு காசு கொடுத்து விடுமாறு அந்த ஆளிடம் சொல்லி விட்டு நகர்ந்தான். அந்த ஆளும் வாங்கி கொண்டு தலையை அசைத்தான். நான் குழப்பத்தின் உச்சிக்கே சென்றேன்.

"யார் அது தாசு ?"

"ஹலோ... சாப்டியா.. வந்தமான்னு இருக்கணும். கேள்வி கேட்டா தாசுக்கு புடிக்காது தெரியுமில்ல.."

பல முறை அதை பற்றி அவனிடம் கேட்டும் பதில் இல்லை.

பின்னொரு நாளில் அவன் வீடு சென்றிருந்தேன். எனக்காக ஒரு சட்டை வாங்கி வைத்து இருப்பதாக சொல்லி பரண் மேலே இருந்த அட்டை பெட்டியை இழுக்க, மேலே இருந்த இன்னொரு அட்டை பெட்டியும் சேர்த்து கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அந்த அட்டை பெட்டி தெறித்து விழுந்தது. அதில் இருந்த பொருளை கண்டு நான் என்னை அறியாமல் சிரிக்க ஆரம்பித்தேன். அத்தனையும் சாக்லேட் பேப்பர்கள்.

என்ன தாஸ் இது -என்றேன்.

ஒன்றும் பேசாமல் எல்லா பேப்பரையும் மீண்டும் எடுத்து அட்டை பெட்டியில் போட ஆரம்பித்தான்.

"அன்னைக்கு ஹோட்டல்-ல பார்த்தோம் இல்ல ரெண்டு பேரு"

"ஆமா" என்றேன்.

"அது எங்க அத்தை பொண்ணு.." என்றான்.

"அப்புறம் ஏன் ஒன்னும் பேசாம வந்துட்ட?"

"நானும் அந்த அவளும்தான் லவ் பண்ணுனோம் மாப்ள. அது அவனுக்கும் தெரியும். அவனும் உன்ன மாதிரி நம்ம கூட சுத்துன ஆளுதான்.வேற ஒரு லவ் மேட்டர்-ல ஒரு பொண்ணோட அண்ணன் கைய்ய நான் நம்ம பசங்களோட சேர்த்து வெட்ட அது போலீஸ் கேஸ் ஆயீ போச்சு மாப்பிள.. அந்த மேட்டர் அந்த பொண்ணுக்கு தெரியாது. இந்த துரோகி அத போட்டு கொடுத்து மெல்ல பேசி பேசி இப்போ அந்த பொண்ணு மனச மாத்திட்டான். இப்போ அதுங்க ரெண்டும் ஜோடி" என்றான்.

"நீ சும்மாவா விட்ட தாசு ?"

பதில் இல்லை அவனிடம்.

"அது சரி இந்த குப்பை எல்லாம் எதுக்கு சேர்த்து வச்சுருக்க? "என்றேன் கடுப்புடன்.

"அவளுக்கு சாக்லேட்-ன்னா ரொம்ப ப்ரியம் மாப்ள. எனக்கு அவ உதடு பட்ட சாக்லேட் பேப்பர்-ன ரொம்ப இஷ்டம்.எப்ப பார்க்க போனாலும் சாக்லேட் வாங்கிட்டு போவேன். நான் இப்படி சேர்த்து வச்சு இருக்கிறது அவளுக்கு தெரியாது. சில சமயம் அவள பஸ் ஏத்தி அனுப்பி வச்சிட்டு திரும்ப ஓடி வந்து எடுத்து இருக்கேன்".

"பின்ன எப்படி விட்டு கொடுத்த? அவன நீ ஒண்ணுமே சொல்லலையா தாசு?"

"என்ன பண்ண... அவனும் நானும் சின்ன வயசுல இருந்தே சேக்காளிங்க.தாயா புள்ளைய பழகிட்டோமிள்ள.வேற ஒரு ஆளா இருந்தா இந்நேரம் அவன் மண்ட மயானம் போய்ருக்குமில்ல.. நம்ம ஆளை நம்மளே எப்படி அடிக்கிறது. அதுக்குதான் அவன எந்த ஹோட்டல்-அ பார்த்தாலும் நம்ம கேங்கா போய் பட்டறைய போட்டு பில்ல அவன் தலைல கட்டுறது. "ஜாரி" முன்னாடி காசு இல்லைன்னு சொல்ல முடியுமா?. அவன வேற எப்படி பழி வாங்குறது?" என சிரிக்க ஆரம்பித்தான்.

நான் ஒன்றும் பேசாமல் அவன் வீட்டை விட்டு கீழறங்கி தெருவில் நடக்க ஆரம்பித்தேன்.. அதன் பாதிப்பில் அன்று நான் எழுதிய இரண்டு பக்க கவிதை-இல் ஒரு நாள் முழுதும் யோசித்ததில் கிடைத்தவை இதுதான்.

(ஹி ஹி ஹி .. எழுதியதை கொஞ்ச நாள் கழித்து கிழித்து போடும் பழக்கம் எனக்கு உண்டு.. யாரும் என்ன எழுதி கிழிச்ச-ன்னு கேட்டுற கூடாது இல்ல அதான்)


உறவு நூல் அறுந்து
ஒரு பக்கமாய் தொங்கினாலும்,
உன்னோடான என் நினைவுகள்
உறங்கி கிடக்கின்றன
உன் உதடு பட்ட
ஒவ்வொரு சாக்லேட் பேப்பரிலும்.
-நினைவுகள் தொடரும்.

5 comments:

vasu balaji சொன்னது…

ம்ம். வலைமனையில் உங்கள் கவிதை நல்ல ஆரம்பம்.
/இந்த மாதிரியான சமயங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய தெளிவு இல்லாமல் இருந்தது கண்டு எனக்கே வெட்கமாக இருந்தது./

இது எல்லாருக்குமே இருக்கிறது தான். ரொம்ப யோசிச்சி எப்படி ஆச்சின்னு கிளறுவதுதான் பெரும்பாலும்.

கலகலப்ரியா சொன்னது…

very good..! well written..! & kavithai super.. !

Maheswaran Nallasamy சொன்னது…

Nandri..Nandri..

Meeran சொன்னது…

தங்கள் உரைநடை சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள். தங்களிடமிருந்து இதுபோல இடுகைகளை எதிர்பார்கிறேன்.

Maheswaran Nallasamy சொன்னது…

Nandri...

கருத்துரையிடுக

 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies