WEB BLOG
this site the web

"கை"யரு நிலை - "2"


எப்படியோ பிரிவானோம்
இடி விழுந்த ஓடானோம்
இருபது வயசோட
இரு வேறு திசையானோம்.

தண்ணி இல்லா காட்டுக்கு
தாலி கட்டி நீ போக
வரட்டூறு தாண்டி
வாக்கப்பட்டு நான் போக....

ஒம்புள்ள ஒம்புருசன்
உம்பொழப்பு ஒன்னோட

எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட....

---வைரமுத்து(தோழிமார் கதை).

நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டு இருந்தது.சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை-ல் இருந்து மதுரை செல்லும் பேருந்து ஒன்றில் சன்னலோர இருக்கை ஒன்றை எனதாக்கி கொண்டு பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக ஆனபோதும், வண்டி கிளம்புவதற்கான அறிகுறி ஒன்றும் தென்படவில்லை. தூரத்தில் விசும்புகிற குரல் கேட்டு எட்டி பார்த்தேன். ஒரு இளம்பெண் அழுது கொண்டிருக்க, மற்றொருவள் எதையோ சொல்லி அவளை தேற்ற முயன்று கொண்டு இருந்தாள். கைக்குட்டை கொண்டு கண்ணீரை துடைத்து கொண்டு அழுகையை கட்டுப்படுத்த முயற்சிப்பது நன்றாகவே தெரிந்தது. இருவரும் கல்லூரி தோழிகள் எனவும், படிப்பு முடிந்து சொந்த ஊர் திரும்பும் நேரத்தில், பிரிவை நினைத்து அழுவதும், அவர்கள் பேசி கொள்வதில் இருந்து தெரியவந்தது.மீண்டும் சந்திப்போமோ இல்லையோ என்ற நிச்சயமற்ற நிலையில் அந்த பெண்ணால் அழ மட்டுமே முடிந்தது. "அப்புறம் மச்சி பார்க்கலாம்..போன் பண்ணு .." என்று பிரிய முடியாதபடியான நட்பு. அன்று அந்த பெண்ணை ஆறுதல் படுத்தும் விதமாக நான் எழுதிய கவிதை,பின்னொரு நாளில் தோழிமார் கவிதை படித்த போது நினைவுக்கு வந்தது.



எவன் எழுதி வைத்த சட்டமிது
பிரிய நேரிடும் போதெல்லாம்
பிழிய பிழிய அழுவதென ?


கருத்த விழி இரண்டை
கண்ணீரில் நனைப்பவளே
கண்ணீரால் உன் கவலையை
கை குட்டைக்கும் ஏற்றாதே...

இதயமும் துடிப்புமாய்
இருந்த காலம் போயாச்சு
நிகழ் காலம் திரும்ப பழகு
நினைவுகளை நேசிக்க தொடங்கு

நம் இருவருக்குமான நட்பு
கொஞ்சம் வேறுபட்டது
இருவர் மனதிலும்
நன்றாக வேர் விட்டது.

உடலும் உள்ளமும் ஒரு சேர
சோர்ந்து போகும் வேளையெல்லாம்
நான் உன் பெயர் சொல்லி கொள்வேன்
நினைவுகளால் கொஞ்சம் எனக்குள்
நிழல் பரப்பிக் கொள்வேன்.

இருக்கும் விழி இரண்டில்
ஈரபதம் உள்ளவரை
நீங்காத உன் நினைவு -என்
நெஞ்சோரம் தங்குமடி!!!

"கை"யறுநிலை!!!


சென்னையில் வசிக்கும் தோழி ஒருவரின் நான்கு வயது குழந்தை மரண செய்தியை ஒரு சில வாரங்களுக்கு பின்னே அறிந்த நான் துக்கம் விசாரிக்க சென்றேன்.நான் ஆரம்பிப்பேன் என அவரும், எப்படி ஆரம்பிப்பது என நானும் இருந்தோம். எந்த நேரமும் அவர் பெருங்குரல் எடுத்து அழக்கூடிய அபாயம் இருந்தது. வீட்டில் நிலவிய கனத்த மௌனத்தை உடைக்க நான் எதை எதையோ பேசி விட்டு கிளம்பி வந்தேன். கடைசி வரை எதற்காக சென்றேனோ அதை பற்றி பேசாமல் கிளம்பி வரும்படி ஆயிற்று. இந்த மாதிரியான சமயங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய தெளிவு இல்லாமல் இருந்தது கண்டு எனக்கே வெட்கமாக இருந்தது. வரும் வழியில், நடந்த துக்கத்தில் நானும் பங்கெடுப்பதாய் குறுஞ்செய்தி அனுப்பினேன்.நன்றி சொல்லி பதில் வந்தது.

சில சமயம் பிரிவுகள் தாங்கவொண்ணா துயரத்தையும், வேறு ஒன்றால் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தையும் விட்டு செல்வதாக தோன்றும். பிரிவுகளை சிலர் எதிர்கொள்ளும் முறை என்னை பல சமயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நான் மதுரையில் இருந்த போது அறிமுகமானவன் தாஸ். ஒல்லியான கருத்த கண்ணாடி போட்ட உருவம். மதுரை வட்டார மொழியில் சொல்லுவதென்றால் "மாக்கான்" போல இருப்பான். மதுரை மண்ணுக்கே உரிய "லந்துகளுக்கும்" சொந்தக்காரன். உலகத்தில் உள்ள அத்தனை சந்தோசத்துக்கும் குத்தகைகாரன். உனக்கு கவலையே வராதா தாஸ்? - இது அவனை அடிக்கடி பார்த்து கேக்கும் கேள்வி.கொஞ்ச நாட்களிலேயே என்னுடைய உலகம் அவனோடு என்றாகிப் போனது. அவனை பற்றி மட்டும் இரண்டு இடுகை போடலாம்.

ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் நாங்கள் உணவுக்காக காத்திருந்த வேலையில், ஒரு ஜோடி எங்கள் பக்கத்துக்கு மேஜையில் வந்து அமர்ந்தது. நங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் தாஸ் பில்-ஐ எடுத்து கொண்டு அந்த ஜோடி இருந்த மேஜையில் வைத்து விட்டு காசு கொடுத்து விடுமாறு அந்த ஆளிடம் சொல்லி விட்டு நகர்ந்தான். அந்த ஆளும் வாங்கி கொண்டு தலையை அசைத்தான். நான் குழப்பத்தின் உச்சிக்கே சென்றேன்.

"யார் அது தாசு ?"

"ஹலோ... சாப்டியா.. வந்தமான்னு இருக்கணும். கேள்வி கேட்டா தாசுக்கு புடிக்காது தெரியுமில்ல.."

பல முறை அதை பற்றி அவனிடம் கேட்டும் பதில் இல்லை.

பின்னொரு நாளில் அவன் வீடு சென்றிருந்தேன். எனக்காக ஒரு சட்டை வாங்கி வைத்து இருப்பதாக சொல்லி பரண் மேலே இருந்த அட்டை பெட்டியை இழுக்க, மேலே இருந்த இன்னொரு அட்டை பெட்டியும் சேர்த்து கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அந்த அட்டை பெட்டி தெறித்து விழுந்தது. அதில் இருந்த பொருளை கண்டு நான் என்னை அறியாமல் சிரிக்க ஆரம்பித்தேன். அத்தனையும் சாக்லேட் பேப்பர்கள்.

என்ன தாஸ் இது -என்றேன்.

ஒன்றும் பேசாமல் எல்லா பேப்பரையும் மீண்டும் எடுத்து அட்டை பெட்டியில் போட ஆரம்பித்தான்.

"அன்னைக்கு ஹோட்டல்-ல பார்த்தோம் இல்ல ரெண்டு பேரு"

"ஆமா" என்றேன்.

"அது எங்க அத்தை பொண்ணு.." என்றான்.

"அப்புறம் ஏன் ஒன்னும் பேசாம வந்துட்ட?"

"நானும் அந்த அவளும்தான் லவ் பண்ணுனோம் மாப்ள. அது அவனுக்கும் தெரியும். அவனும் உன்ன மாதிரி நம்ம கூட சுத்துன ஆளுதான்.வேற ஒரு லவ் மேட்டர்-ல ஒரு பொண்ணோட அண்ணன் கைய்ய நான் நம்ம பசங்களோட சேர்த்து வெட்ட அது போலீஸ் கேஸ் ஆயீ போச்சு மாப்பிள.. அந்த மேட்டர் அந்த பொண்ணுக்கு தெரியாது. இந்த துரோகி அத போட்டு கொடுத்து மெல்ல பேசி பேசி இப்போ அந்த பொண்ணு மனச மாத்திட்டான். இப்போ அதுங்க ரெண்டும் ஜோடி" என்றான்.

"நீ சும்மாவா விட்ட தாசு ?"

பதில் இல்லை அவனிடம்.

"அது சரி இந்த குப்பை எல்லாம் எதுக்கு சேர்த்து வச்சுருக்க? "என்றேன் கடுப்புடன்.

"அவளுக்கு சாக்லேட்-ன்னா ரொம்ப ப்ரியம் மாப்ள. எனக்கு அவ உதடு பட்ட சாக்லேட் பேப்பர்-ன ரொம்ப இஷ்டம்.எப்ப பார்க்க போனாலும் சாக்லேட் வாங்கிட்டு போவேன். நான் இப்படி சேர்த்து வச்சு இருக்கிறது அவளுக்கு தெரியாது. சில சமயம் அவள பஸ் ஏத்தி அனுப்பி வச்சிட்டு திரும்ப ஓடி வந்து எடுத்து இருக்கேன்".

"பின்ன எப்படி விட்டு கொடுத்த? அவன நீ ஒண்ணுமே சொல்லலையா தாசு?"

"என்ன பண்ண... அவனும் நானும் சின்ன வயசுல இருந்தே சேக்காளிங்க.தாயா புள்ளைய பழகிட்டோமிள்ள.வேற ஒரு ஆளா இருந்தா இந்நேரம் அவன் மண்ட மயானம் போய்ருக்குமில்ல.. நம்ம ஆளை நம்மளே எப்படி அடிக்கிறது. அதுக்குதான் அவன எந்த ஹோட்டல்-அ பார்த்தாலும் நம்ம கேங்கா போய் பட்டறைய போட்டு பில்ல அவன் தலைல கட்டுறது. "ஜாரி" முன்னாடி காசு இல்லைன்னு சொல்ல முடியுமா?. அவன வேற எப்படி பழி வாங்குறது?" என சிரிக்க ஆரம்பித்தான்.

நான் ஒன்றும் பேசாமல் அவன் வீட்டை விட்டு கீழறங்கி தெருவில் நடக்க ஆரம்பித்தேன்.. அதன் பாதிப்பில் அன்று நான் எழுதிய இரண்டு பக்க கவிதை-இல் ஒரு நாள் முழுதும் யோசித்ததில் கிடைத்தவை இதுதான்.

(ஹி ஹி ஹி .. எழுதியதை கொஞ்ச நாள் கழித்து கிழித்து போடும் பழக்கம் எனக்கு உண்டு.. யாரும் என்ன எழுதி கிழிச்ச-ன்னு கேட்டுற கூடாது இல்ல அதான்)


உறவு நூல் அறுந்து
ஒரு பக்கமாய் தொங்கினாலும்,
உன்னோடான என் நினைவுகள்
உறங்கி கிடக்கின்றன
உன் உதடு பட்ட
ஒவ்வொரு சாக்லேட் பேப்பரிலும்.
-நினைவுகள் தொடரும்.

அனுபவம் புதுமை!!!!!!!



சீக்கிரமே வீடு வந்து சேர்ந்துவிட்டேன் அன்று. கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. சின்ன மைனாவும் என்னோட மனைவியும் ஊரில் இல்லை. "பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா" - என ஜனகராஜ் மாதிரி கத்தாத குறைதான். இனி அந்த அந்த நாளின் எஞ்சிய நேரம் அத்தனையும் எனக்கே எனக்கு. இரண்டு புத்தகங்கள் வாங்கி வைத்து ரொம்ப நாளாக படித்து முடிக்க படாமல் இருந்தன. முடித்த பின் தான் தூங்க வேண்டுமென முடிவு செய்த நேரத்தில் கதவு தட்டபட்டது.

வெளியே வாசலில் இரண்டு பேர் கைகளில் நன்கொடை புத்தம்.

"வணக்கம் நாங்க கணேஷா விழா கொண்டாட போறோம். அன்ன தானத்துக்கு நன்கொடை வேணும்".

"சந்தோசம்.. ஆனா நான் இதுக்கு எல்லாம் பணம் தர பழக்கம் இல்ல"

" சார்.. நாங்க பொய் சொல்லல சார். கணேஷா சிலை கூட இங்கதான் வைக்க போறோம்"

" எல்லாம் சரி. நான் என்னை நம்புற ஆள்"

" புரியலே..அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

" நான் கடவுளை நம்புற ஆள் இல்லை அய்யா." என்றேன். அவர்கள் என்னை நம்பின மாதிரி தெரியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

"நீங்க நம்பட்டா போகுது. நாங்க நம்புகிறோம். பணம் கொடு" - பேச்சு ஒருமைக்கு மாறி இருந்தது.

"இல்லபா. இதுக்கு எல்லாம் நான் பணம் தராது இல்லை"

"நீ முஸ்லிமா?"

"இல்லை"

"பின்ன ஏன் பணம் தர மாட்டேங்குற.. இப்படி ஒரு பதிலை கேள்வி பட்டதே இல்லை"

"டேய் .. கடவுள் சத்யமா எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லடா.. " என கதற வேண்டும் போல இருந்தது. ஒரு வழியாக இவனிடம் இருந்து பணம் வராது என முடிவு பண்ணி இருவரும் கன்னடத்தில் என்னை திட்டியவாறே அடுத்த வீடு நோக்கி நகர ஆரம்பித்தனர்.


சரியாக இரண்டு நாள் கழித்து மாலை என்ன வீடு அருகே தெருவை மறைத்து பந்தல் போட பட்டது. உள்ளே ஒரு பெரிய விநாயகர் சிலை ஒன்று வண்ண விளக்கு அலங்காரத்தில் (உபயம்: எனது வீடு உரிமையாளர்) ஜொலித்து கொண்டு இருந்தது.

பாதையை அடைத்து பந்தல் போட பட்டு இருந்தது. நான் எனது வண்டியை வீட்டுக்கு எடுத்து போக முடியும் என தோன்ற வில்லை. என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த அந்த இரண்டு ஆசாமிகளும் ராஜ போதையில் அங்கே தான் இருந்தார்கள். அவர்கள் அங்கே இருந்து என்னை முறைப்பதாய் கூட தோன்றியது. வண்டியை ஓரம் போட்டு விட்டு மெல்ல வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். "அம்மாடி ஆத்தாடி என்ன உனக்கு தரயாடி?" போன்ற பக்தி பாடல்களுக்கு நண்டு சுண்டாங்கள் ஆட்டம் போட்டு கொண்டு இருந்தன.

"டண்டனக்க டண்டனக்க டண்டனக்க" என சத்தம் காதை கிழிக்க ஆரம்பித்தது சிறிது நேரத்தில். இப்போது நண்டு சுண்டான்களோடு பெருசுகளும் போதையின் துணையோடு ஆட தொடங்க இருந்தார்கள். எனக்கு அது எங்கவூர் பக்கம் அடிக்கும் சாவு மேளத்தின் தொனியை நினைவுபடுத்தியது. அருளை "ஹோம் டெலிவரி" செய்வதற்காக பிள்ளையார் சிலை ஒரு வண்டியில் வைத்து வீடு வீடாக இழுத்து வரப்பட்டது. எனக்கு ஏனோ தேவை இல்லாமல் யானை-ஐ பற்றிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. சிரித்து கொண்டே இரவு உணவிற்கான விடுதியை நோக்கி நடக்க தொடங்கினேன். தூறலாக தொடங்கிய மழை சிரித்து நேரத்தில் பெரும் மழையாக அடித்து ஊற்ற ஆரம்பித்தது. தூரத்தில் பிள்ளையார் ஊர்வலம் கலகலத்து போயிருந்தது. எல்லோரும் மறைவிடம் தேடி ஓட, பிள்ளையார் சிலை கலர் கலராக கரைய ஆரம்பித்தது.

நம்மில் இருந்து தொடங்கட்டும்.. இந்த தீபொறி

உண்மையை வெளியே எடுத்து சொல்ல வேண்டிய வெகு ஜன ஊடகங்கள் விலை போய் விட்ட கொடுமை. உலக தமிழர்களின் தலைவர் என்று சொல்லப்பட்ட கிழவர் பதவி சுகத்திற்கு எதை வேண்டும் என்றாலும் காவு கொடுக்க தயாராக இருக்கிற சூழ்நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும்? என்ற நிலை நம்மில் பலருக்கு.

தலைவன் இல்லாத இனமாகவே தமிழினம் இப்போது தத்தளிப்பதாக எனக்கு தோன்றுகிறது. மன்னிக்கவும்.. சொல்லவே நா கூசுகிறது. தமிழக தமிழரில் பலருக்கு இதை பற்றிய கவலையோ, அல்லது அறிந்து கொள்ள வேண்டிய ஆர்வமோ இல்லை. ஸ்ரீலங்கா கொடுமை நினைத்து என்னை போன்று தூக்கம் இழந்தவர் வெகு சிலர். இலவச தொலைகாட்சி தொடர்களிலும், ஆபாச நடன நாடியங்களிலும் தங்களை தொலைத்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.

சில நாட்களாக வலை பூக்களில் வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியை உண்டு பண்ண கூடியதாக இருக்கிறது. தமிழக தொலைகாட்சிகளோ, பத்திரிகைகளோ இதை கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

இங்குள்ள கவிஞர்களில் பல பேருக்கு காசின் மேல் இருக்கும் அக்கறை தம் இனத்தின் மேல் இல்லை. ஒன்றிரண்டு கவிதை எழுதி ஒப்பாரி வைத்ததோடு சரி. கல்லறை போகும் வரை காசு வேணும் என்று பாடிய கவிஞர்கள வாழும் நாடு இது.

இன்று தமிழ் வலை பூக்களுக்கு இருக்கும் வட்டம் பெரிது. தூங்கி கொண்டு இருக்கும் தமிழினத்தை எழுப்பும் பொறுப்பு நமது. உண்ண உணவின்றி, மறைக்க துணியின்றி, அன்னை இன்றி, அப்பன் இன்றி, உறவு இன்றி நம்மையே எல்லாமுமாய் நினைத்து, அங்கே ஏங்கி கொண்டு இருக்கும் மூன்று லட்சம் தமிழர்களுக்கும் தோள் கொடுப்பது நமது கடமை. சீக்கியன் ஒருவனின் மயிரை அறுத்த காரணத்திற்காக அந்த இனம் விதியில் இரங்கி போராடியது நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். தமிழனின் உயிர் அறுத்தும் அமைதியாக நிற்கிறது என் தேசம். விழிப்புணர்வு உங்கள் வீட்டில் இருந்து தொடங்கட்டும். நம்மில் பலரின் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட இந்த கொடுமைகளின் ஆழம் புரிந்து இருக்க வில்லை. நம்மால் ஒரு பத்து பேருக்கு இதை பற்றிய அறிவுட்டலை செய்தால் போதும். தீ பொறி நம்மில் இருந்து தொடங்கட்டும். இதை செய்ய தவறும் வேளையில், தமிழின அழிவுக்கு நாமும் துணை ஆகிவிட்ட பாவத்துக்கு ஆளாவோம்.


http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1251539986&archive=&start_from=&ucat=15&

தமிழனுக்கு எதுக்கு மதம்?

"உங்களுக்கு இயேசு மேல நம்பிக்கை உண்டா?" என்ற குரல் கேட்டு சாளரத்தின் மேல இருந்த பார்வையை விலக்கி அந்த பெரியவரை பார்த்தேன். என்னைத்தான் கேட்டு கொண்டு இருந்தார். சென்னை-ல் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டு இருந்த ரயில் அது. என் மனைவி "சின்ன மைனாவை"* தூங்க வைக்க போராடி கொண்டு இருந்தாள். என்னை பார்த்து இந்த கேள்வி கேட்க பட்டதும் சிரிக்க முற்பட்டாள். கேள்வி கேட்ட பெரியவரை பார்த்தேன். அறுபது வயதுக்கு மேலே இருக்கும் அவர் கையில் பெரிய பைபிள் ஒன்று இருந்தது. பேசும் மன நிலையில் நான் இல்லை.

"இல்லைங்க. நான் கடவுள் மறுப்பு கொள்கையை கடை புடிப்பவன்"

" ஒ!! அப்படியா செய்தி. உங்க மாதிரி ஆட்களைத்தான் இயேசு ராசா முதலில் ரட்சிக்கிறார் தெரியுமா? "

" இவரு ரொம்ப நேரமா இப்படித்தான் எல்லோரையும் கேட்டு தொல்லை பண்ணுகிறார்" என்றாள் என் மனைவி முணுமுணுப்பாக. நான் வெளியே வேடிக்கை பார்க்க போய் இருந்த சமயம் அவர் இது பற்றி எல்லோரிடமும் பேசி இருக்க கூடும் என்று நினைத்து கொண்டேன்.

"தம்பி உங்களைதான் கேக்குறேன் .. அப்படி எல்லாம் இருக்கிறது தப்பு தெரியுமா?"

பெருசுக்கு நேரம் சரி இல்லை. சொந்த செலவில் செய் வினை வைத்து கொள்கிறார் என்று நினைத்து கொண்டேன்.

" நம்ம இத பத்தி ரொம்ப நேரம் விவாதம் பண்ண வேண்டி இருக்கு. அப்புறம் நீங்க என்னோட கட்சி மாற வேண்டி இருக்கும்.. சரியா?" என்றேன்.

" இல்ல இயேசு ராஜா என்ன சொல்லுகிறார் என்றால்...."

"நிறுத்துங்க...நான் ரொம்ப கேள்வி கேக்க போறது இல்ல ... ஒரே ஒரு கேள்வி தான்..அதுக்கு மொத பத்தி சொல்லுங்க அப்புறம் பேசலாம்"

"என்ன?"

"நீங்க தமிழ் கிருத்தவர் தானே"

"ஆமாம்"

"இப்போ ஸ்ரீலங்கா -ல நடந்த போரில் ஏகப்பட்ட தமிழ் கிறித்துவர்கள் செத்து போய்டாங்க.. நெறைய தேவாலயம் இடிஞ்சு போச்சு..இன்னும் நிறைய கிருத்துவர்கள் சோத்துக்கு கஷ்ட படுறாங்க...புத்த மதம் இருக்குன்னு ஒரே காரணத்துக்காக சீனாகாரனும் ஜப்பான்காரனும் அவனுக்கு காசும், ஆயுதமும் கொட்டி கொடுத்தானே.. நீங்க உங்க ஆளுங்களுக்கு என்ன செஞ்சீங்க? நீங்களும் உங்க பேராயரும் மூச்சு விடலையே ஏன்..?"

அவரிடம் இருந்து பதிலே இல்லை.

"என்னன்னா அதனால ஒரு பிரயோசனுமும் இல்ல .. அப்படி பேசினா உங்களை தூக்கி ஜெயில்-எ போட்டிருவான். வாடிகன்ல அவங்களை தமிழ் ஆளா பார்த்தான். கிருத்துவனா இல்ல..அத நீங்க புரிஞ்சிக்கணும். முதல உங்களை நம்பி மதம் மாறுன சனத்துக்கு எதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.. அப்புறம் என்னை மாதிரி ஆளுங்க கிட்ட வரலாம்"

அவர் என்னிடம் பேச விரும்பவில்லை போலும். அவர் பைபிள்-ஐ திறந்து வைத்து கொண்டார். நான் இறங்கும் வரையில் என்னுடைய பார்வையை தவிர்த்தார். இறங்கும்போது இதை பத்தி சிந்திக்குமாறு சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

ஒரு கனவு !!!!

மணல் வெளியெங்கும்
காண கிடக்கின்றன
சவ குழிகள்.

வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறன
சமாதானத்திற்கான கொடியும்
அதை ஏந்தியவர் கரங்களும்.

புத்தர் மாதிரியொருவர்
போதி மரத்தை
வெட்டி கொண்டிருந்தார்.

தூரத்து பள்ளி கட்டிடமொன்றில்
இடிபாடுகிடையில் இறந்து கிடந்தன
இயல் இசை நாடகம் மூன்றும்.

சவகுழியில் இருந்து மீண்டும்
சத்தம் வரக்கூடுமென
இருவர் பேசி கொண்டனர்.

தூரத்தில் பிணதின்னி கழுகளோடு
பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருந்தது
என்தேசத்தின் இறையாண்மை

கால்கள் துவள
நடக்கிறேன் நான்.
நீண்டு கொண்டே செல்லும்
பாதை முடிவதாக இல்லை

இறந்து கிடந்த
தாயின் மார்பில் வழிந்த
ரத்தத்தை உறிஞ்சி குடிக்க
தொடங்கியது ஒரு குழந்தை

அலறியபடி கண் விழித்து
எழுந்தேன் நான்


கரடி பொம்மையை கட்டி
படுத்திருந்த என் குழநதை
தூக்கத்தில் சிரிக்க தொடங்கியது.

ஒரு சிலையும் உறை சிறையும்!!!



பெங்களூருவில் சுமார் பதினெட்டு ஆண்டுகள் மூடி வைக்கப்பட்டு இருக்கும் திருவள்ளுவர் சிலை அடுத்த மாதம், கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. - செய்தி.


"தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை." -திருவள்ளுவர்.


தமிழின காவலர் கலைஞருக்கு பெங்களூர்-ல் வசிக்கும் அவரது அருமை மகள் செல்வி நினைவு வந்து இருக்க கூடும். கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தியபோது "சந்தன" புகழ் வீரப்பனால் தனது கோரிக்கைகளில் ஒன்றாக வைக்கப்பட்ட இந்த வள்ளுவரின் சிறை மன்னிக்கவும் சிலை திறப்பு விழா, பெங்களூர் தமிழ் மக்களால் பலமுறை முயற்சி செய்தும் முடியாத நிலையில் தமிழரின் நலனுக்காகவும், தமிழுக்காகவும் தன்னை அர்ப்பணித்து கொண்ட (?), கலைஞர் அவர்களால் திறக்கப்படவிருக்கிறது. ஒரு வாரம் மகள் வீட்டில் ஓய்வு எடுத்த பின் விமான நிலையம் செல்லும் வழியில் இந்த சிலை திறப்பு விழா நடக்கவிருக்கிறது.


சிலை திறப்புக்கு பின் என்ன ஆகும்?:
இதுவரை காக்கை, குருவிகளின் கழிவுகளை தாங்கி வந்த சாக்கு அகற்றபடவிருப்பதால், இனி வள்ளுவர் தலை இனிமேல் அந்த பணியை சிரமேற்கொண்டு செய்ய தொடங்கும்.
அந்த இடத்தில இனி காவல் காக்க வேண்டிய அவசியம் (யாரும் சிலையை திறந்து விடாமல்(?)) பெங்களூர் காவல் துறைக்கு இல்லை.
பெங்களூர் தமிழ் சங்கத்துக்கு ரூபாய் ஐந்து லட்சம் வளர்ச்சி நிதியாக கிடைக்கும். அந்த நிதி இதே போல் கலைஞர் சிலை அமைக்க உதவும்(வேற எதுக்கு இந்த ஐந்து லட்சம்?).
இனி காவிரியில் தண்ணீர் கேட்டால் வாட்டால் நாகராஜன் கும்பல் சாணி அடிக்க இந்த சிலை உதவ கூடும்.கழக திமுக அரசின் சாதனையாக கலைஞர் அவர்களால் சட்ட சபையில் அறிவிக்க பயன்பட கூடும்.

என்ன கொடுமை சார் இது???. இதுக்கு அந்த சிலையே வைக்காமல் இருந்து இருக்கலாம். இதை விட வள்ளுவரை கேவல படுத்த முடியுமா என்ன?

மைனாவே.. மைனாவே!!!!

மைனா சந்தோசமாக இருந்தான்..தலையில் எண்ணெய் தேய்த்து அழுத்தி வாரி இருந்தான். அடிக்கடி அவனும் அவன் அய்யாவும் நின்று இருந்த வரிசையை பார்த்து கொண்டு இருந்தான். அவன் நின்று இருந்த சற்று தூரத்துக்கு முன்னே சுரேஷும், வேலுவும் நின்று கொண்டு இருந்தார்கள்.

"என்னபா நீயும் பயல பள்ளிக்கூடத்தில சேர்க்க வந்திய என்ன"? - சுரேஷன் அப்பா கேட்டார்.

"ஆமாப்பா. நேத்து இருந்து தூங்க விட மாட்டேங்கிறான். இன்னும் நாள் கிடக்குடா- ன்னு சொன்ன கேட்டாதானே" என அலுத்துகொண்டார்.

மைனாவின் சந்தோஷத்திற்கான காரணமும் இருந்தது.அது அந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளிக்கூடம். முதலாம் வகுப்பு சேர்க்கை நடந்து கொண்டு இருந்தது. ஜூன் மாதத்தின் வாடை காற்று ஒரு விதமான சிலிர்ப்பை தந்தது.

"அய்யா.."

"என்னடா"

முந்தய நாள் இரவின் தூக்கமின்மை குரலில் தெரிந்தது. கண்கள் சிவப்பேறி கிடந்தது.

"அப்போ இன்னைல இருந்து நான் ஒன்னாப்பு இல்ல.பெரிய பையன் ஆயீடன் இல்ல"

"ஆமாடா அதுக்குதானே வந்து இருகோம்"

"அப்போ அரை கிளாஸ் போக வேணாம் இல்ல"

"ஆமாடா ...இத எத்தனை தடவை கேப்ப"

"அப்புறம் ஏன் சுரேஷு அழுவுறான்?.படிக்கட்டு வச்ச பள்ளிகொடம் தானே போக போறோம்?"

"அந்த பயபுள்ளைக்கு பள்ளிகொடம்-னாலே கசப்புதான்..நீ சும்மா இருடா".

"அரை கிளாஸ்" கட்டிடம் தொடக்க பள்ளியின் கட்டிடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. "அரை கிளாஸ்" என்று அழைக்கப்படும் அந்த பால்வாடியில் நான்கு படிகள் ஏறியதும் வகுப்பு அறை வந்துவிடும். இருப்பது ஒரே ஒரு அறைதான். பெஞ்சுகள் கிடையாது. எல்லாம் தரை வாசம்தான். பிள்ளைகளை கூட்டி கொண்டு வர, கொண்டு சென்று விட ஒரே ஒரு ஆயா. "கோண கோண புளியங்கா .. கொம்ப சுத்தி புளியங்கா" ..என சொல்லி தரவும், பிள்ளைகளை தூங்க வைக்கவும் ஒரே ஒரு டீச்சர். நான்கே படிகள் கொண்ட பள்ளியில் படிப்பது மைனாவுக்கு ஒரு பெரிய கவுரவ பிரச்சினயாக இருந்தது.

பதினாறு படிகள் கொண்டது ஆரம்ப பள்ளி கூடம்.மைனாவுக்கு அந்த பள்ளியின் மேல் ஒரு பிரியம் இருந்தது. உள்ளே நுழைந்ததும் இரண்டு புறமும் வகுப்பு அறைகள். இருபுற சுவர்களில் கரும் பலகைகள். எந்நேரமும் "ஹோ" -வென சத்தமும், ஆசிரியை சொல்ல சொல்ல, பிள்ளைகள் திருப்பி சொல்லும் சத்தமும் நாளை முதல் நாமும் அங்கே வர போகிறோம் என்ற எண்ணமும் ஒரு வித மயக்கத்தை உண்டு பண்ணியது.

உள்ளே தலைமை ஆசிரியரின் அறை பரபரப்பாக இருந்தது. வேலுவும், சுரேஷ்-ம தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளியில் வருவதை மைனா கவனித்தான்.

"அய்யா"

"என்னடா ..சும்மா தொண தொண-ன்னுகிட்டு"

" வேலுவும் சுரேஷனும் பள்ளிக்கூடத்தில சேர்ந்து வீட்டுக்கு போய் கிட்டே இருகாங்க. நம்ம சீக்கிரம் வந்து இருக்கலாமில்ல"

"கொஞ்ச நேரம் பொறுடா.. என்ன அவசரம்...நைட் ஷிப்ட் போயிடு வந்த நானே சும்மா இருக்கேன்.. இன்னும் கொஞ்ச பேருதான் இருக்காங்க"

பள்ளி மைதானம் காலியாக இருந்தது. அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தி கொண்டு நாவல் மரத்தின் மேல் ஓடியது. அரச மரத்தின் இலைகளின் காற்றில் சலசலத்தன. இரட்டை வேப்ப மரம் வரை நீண்டு இருந்த வரிசை இப்போது படிக்கட்டுகளின் விளிம்பில் இருந்தது.

"அடுத்து யாருப்பா?" என்ற குரல் கேட்டு தலைமை ஆசிரியரின் அறையின் உள்ளே நுழைந்தான் மைனா.

உள்ளே நுழைந்தவுடன் அய்யா வணக்கம் சொல்லிவிட்டு கைகளை கட்டி கொண்டார்.
"உன் பேரு என்ன?" - குரல் வந்த திசையை கவனித்தான்.

கனத்த பெரிய கருப்பான பெரிய உருவம் ஒன்று உள்ளே உக்காந்து இருந்தது.பயத்தில் அவன் வயிற்றில் எதுவோ உருண்டது. சிறு நீர் வந்துவிடும் போல இருந்தது. குரல் மைனாவின் தொண்டையை விட்டு வெளியே வர வில்லை.

"என்ன வயசாகுது ? " - இது அய்யாவை பார்த்து கேட்க பட்ட கேள்வி.

" அஞ்சு நடக்குதுங்க"

"பார்த்த அப்படி தெரியலையே"

"இல்லைங்க சார். நிசம்தான். இதோ பாருங்க ஜாதக புத்தகம்"

"அட அதை நான் நம்புறது இல்லபா. சரி ..அவனை காதை தொட சொல்லு"

வலது கையை எடுத்து உச்சந்தலையை சுற்றி இடது காதை தொட்டு விட்டால் ஐந்து வயதை அடைந்து விட்டதாக அர்த்தம். அது ஒன்றே வயதை நிர்ணயிக்கும் அளவுகோலாக இருந்தது. எனது வலது கையை எடுத்து நானும் காதை தொட மீண்டும் மீண்டும் முயன்றேன். ஊகும்..காது எட்டுவதாக இல்லை.

"நீங்க ஒன்னு பண்ணுங்க ..அடுத்த வருஷம் வாங்க அதுக்குள்ள பைய்யன் வளந்துருவான்" - என்றார்.

"இல்லைங்க.. பைய்யன் பொக்கு-னு போயிருவான். ரெண்டு நாளா இதையே சொல்லிக்கிட்டு கிடந்தான்"

" ஏப்பா .. ஒரு தடவ சொன்ன புரியாதா? அடுத்து ஆளுங்க வெளிய இருக்காங்க பாரு.. அடுத்து யாருப்பா"

மைனா மீண்டும் அரை கிளாஸ்-கே கொண்டு வரப்பட்டான்." போக மாட்டேன்" என அழுத அவன் பக்கத்துக்கு வீடு ஜெயலக்ஷ்மி அங்கே உக்காந்து இருப்பது காண்பிக்க பட்டு மீண்டும் ஒரு வருடம் அங்கே உட்கார வைக்க பட்டான். அடுத்து ஒரு வாரம் சுரேஷ்க்கும், வேலுவிக்கும் காதை தொடாத மைனாவின் தோல்வியும், காதை தொட்ட அவர்களின் வீர பிரதாபங்களும் அவர்களின் பிரதான கதை களமாக இருந்தது. என்னுடன் சேர்ந்து விளையாடலாமா ? இல்லையா என்பது அவர்களால் தினந்தோறும் பொதுக்குழு கூடி முடிவெடுக்க பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வகுப்புகள் பற்றிய கதைகள் சொல்லப்பட்டு, அடுத்த ஆண்டு பாடம் பற்றி இந்த ஆண்டே மிரட்டப்பட்டேன். "காது தொட முடியாதவன் எல்லாம் பேசுறாண்ட டேய்" - என்று கேலி செய்யபட்டு காதை கண்ணாடியில் கூட பார்க்க முடியாத அளவுக்கு வெறுப்பேற்றபட்டான் மைனா.


மைனா பெரிய பள்ளியில் சேர்ந்து ஆண்டு மூன்று முடிந்து பின் அவனுக்கான காலம் வந்தது. இப்போது அவன் மூன்று முடிந்து நான்காம் வகுப்பு.நான்காம் வகுப்பு ஆசிரியர் வந்து தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்து தனது வகுப்புக்கு அழைத்து சென்றார். பட்டியலில் பெயர் இல்லாதவர் மீண்டும் அதே வருடம்.. அதே வகுப்பு ..அதே பாடம்..

நான்காம் வகுப்பு கொஞ்சம் பெரியதாக இருந்தது. கடைசி பெஞ்சில் ஓரத்தில் இன்னும் இருவருடன் வேலுவும், சுரேஷ்-ம உக்காந்து இருந்தனர். மைனா ஓடி போய் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

"ஏன்டா நீங்க அஞ்சாப்பு போகல?.. ஏன் நாலாப்புல உக்காந்து இருக்கீங்க?" -மைனா

"இல்லடா.. நாங்க என்னவோ நல்லதாம் படிச்சோம். ஆனா அஞ்சாபுல இடமில்ல. அதான் இங்க உக்காந்து இருக்கோம்..அதுக்காக நாங்க பெயில் அயிடோமின்னு நினைக்காதே"

அன்று மாலை இதே கேள்வி அவர்களின் வீட்டில் கேட்கபட்டு, அதே பதில் சொல்லப்பட்டது. நீண்ட நேரம் அங்கே இருந்து அடி விழும் சத்தமும் அழுகை சத்தமும் மாறி மாறி கேட்டு கொண்டே இருந்தது.

வழிகின்ற கண்ணீரில் நிறம் இல்லையே!!!!



காக்கா இளைப்பாற கருவேல மரமிருக்கு
எம் மக்க இளைப்பாற மாமரத்து நிழல் இருக்கா?
கொக்கு பசியாற கொக்குளத்து மீனிருக்கு
எம் மக்க பசியாற மக்கி போன நெல்லு இருக்கா?.

-நன்றி வைரமுத்து.

சாமியார் "மட"ங்கள்!!!!!


நானும் ரொம்ப நாளா முடிவு பண்ணி வச்சு இருந்தேன், நானா போயி எவனையும் திருத்த முயற்சி பண்ண வேணாமின்னு ( ரொம்ப குழம்ப வேணாம்..நாத்திகம் பேசுறதுதான் அது). நம்மள சும்மா இருக்க விடுறாய்க இல்ல. நமக்கு திங்கள், செவ்வாய் தான் வார விடுமுறை.. சரிதான்.. இன்னும் ரெண்டு நாள் நமக்கே நமக்கா-ன்னு பேப்பர் எடுத்தா..

முன்னாடி வருதையா ஸ்ரீரங்கம் ஜீயர் நியூஸ்.. வயசு எண்பத்து ஏழு. சொந்த ஊரு மேற்கு வங்காளம். இருபது ஐந்து வருடம் தமிழ்நாடு வாசம். கோடிகணக்கான சொத்துக்கு (கவனிக்க: இவர் ஒரு சாமியார்) இவர் வச்சதுதான் சட்டம். ஒரிசா -ல இருந்து சாமியாருக்கு சமைச்சு போட வந்த ஆளு பத்ரி. அவனுக்கு சமைச்சு போட அவன் பொண்டாட்டி. பொறுமை மக்களே.. கதை இனி தான் ஆரம்பம்.அந்த அம்மணியோட இந்த சாமியார் காம களியாட்டங்களில் ஈடுபட்டதாகவும், அதை வைத்து கொண்டு அந்த ஒரிசா சமையல்காரன் சாமியாரை மிரட்டி சகல உரிமைகளையும் வாங்கி கொண்டதாகவும் பேச்சு.
இந்த ஆளைதான் காணவில்லை, சமையல் காரனும் அவன் மனைவியும் சாமியாரை மிரட்டி ஊரை விட்டு விரட்டி இந்த சொத்தை எல்லாம் அனுபவிக்க பாக்குறாங்கன்னு ஒருத்தன் போட்டான் கேஸ். நம்ம ஊரு போலீஸ்-ம அந்த சாமியாரை தேடி கொண்டு வந்தாங்க. அவரும் நீதி மன்றத்துக்கு வந்தார். நீதிமான் கேக்குறாரு " அய்யா சாமி தர்ம பிரபு .. எங்க போய் இருந்தீங்க இம்புட்டு நாலுன்னு".. சாமியார் உடனே சொல்லுராரு "தமிழ் மாலும் நகி...ஹிந்தி தெரிஞ்ச ஆளு வேணுமின்னு". கடுப்பு ஆன நீதிபதி " அய்யா நக்கல் பண்ணாதீங்க..எங்களுக்கும் சூது வாது தெரியும். இம்புட்டு நாலு இங்கதானே இருந்தீங்க.. தமிழ் தெரியலைன்னு சொன்ன எப்படி?"-ன்னு கேட்டார். சாமியாரும் சளைச்ச பாடு இல்ல. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?.. " ஆமா... நீங்க சொல்லுறது சரிதான் ஆனா நான்தான் மடத்தை விட்டு வெளிய போனது இல்ல..இப்போதான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி சமையல்கார பத்திரி-ஐ மடத்தை பார்த்துக்க சொல்லிட்டு மடத்துக்கு வருமானம் கொண்டு வர வடக்கே போன்னேனு". எண்பத்து ஏழு வயசு ஆ"சாமி" விவகாரமே இப்படின்னா.. தமிழ் நாட்டுல இருக்கிற நிறைய "கன்னி ஆ"சாமி" " விவகாரம் எப்படி இருக்குமோ?.
எங்கயோ இருந்து இங்க வந்து நம்ம ஊரு சொத்துல வர வருமானத்தில தின்னு போட்டு தமிழ் தெரியாதின்னு பொய் சொல்லுறேனே..தமிழன் கேனபயல்-ன்னு சொல்ல இத விட வேற வேணுமா..?

யுத்தம் சரணம் கச்சாமி !!!!

வீழ்ந்ததாம் தமிழர் படை..
நக்கி குடியுங்கள் நரிகளே
இனிக்கிறதா எங்கள் ரத்தம்?
மிச்சம் இருந்தால் கொஞ்சம்
புத்தருக்கும் கொடுங்கள்.

உடல் சிதறி திசைகொரு பாகமாய்
வானம் பார்த்து கிடைகின்றன
எங்களவரின் சடலங்கள்
வல்லூறுகள் வாசனை கண்டு வருமுன்
வந்து பார்க்க சொல்லுங்கள்
இத்தாலி ராணியை
இதுதானே அவள் கேட்டது?.

முயலும் வேட்டை நாய்களும்
கூடி வாழ வேண்டுமென
கூடி நின்று குரல் கொடுத்தவர்களே
உங்கள் காதுகளில் கேக்கவே
இல்லையா எங்கள் கூக்குரல்?

உங்களின் பலிக்கு
எங்களில் மிச்சம் இருப்பது
உறுப்பு இழந்த ஒரு சில
பச்சிளம் குழந்தைகள் மட்டுமே

நாங்கள் கூடி அழ
கொண்டாட்டம் போடுகிற்வர்களே
கொஞ்சம் பொறுங்கள்
முற்றுபெறவில்லை எங்கள் போராட்டம்
முளை கிள்ளி விடப்பட்டு இருக்கிறது
நீங்கள் புடித்தது புலி வாலை

சிரிக்கும் உங்கள் இதழ்கள்
சீக்கிரம் உச்சரிக்கும்
யுத்தம் சரணம் கச்சாமி!!!

தாய் தமிழகம்?

திரைப்பட நடிகர் சத்யராஜ் தமிழக மக்களின் பங்களிப்பு ஈழ தமிழ் பிரச்சினையில் வேதனை அளிக்க கூடியதாக இருக்கிறது என்றும், பக்கத்து வீடு பற்றி எரியும் வேலையில் நாம் இப்படி சும்மா இருப்பது கூடாது என்றும் கொந்தளிக்கிறார். அட போங்கயா... இவர் என்ன புரியாத ஆளாக இருக்கிறார் ?. தமிழன் என்ன மானமுள்ள ரோசமுள்ள சீக்கியனா?. உணர்வுகள் துரு புடித்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. தற்போதைய தமிழனின் தலையாய கடமைகள்,

அரசு கொடுத்த இலவச தொலை காட்சி பெட்டிகளில் மானாட மார்பாட , மன்னிக்கவும் மானாட மயிலாட போன்ற கருத்தாழம் மிக்க நடன நிகழ்ச்சிகளிலும் , காலை முதல் மாலை வரை அழுது தொலைக்கும் நெடுந்தொடர்களிலும் ( நிகழ்ச்சிகள் தமிழாக்கம் : தமிழின காவலர் கலைஞர் ) கவனம் செலுத்துவது. இத்தகைய தொலை காட்சி நெடுந்தொடர் ஒன்றில் கூட ஒருவனுக்கு ஒரு மனைவியோ, ஒருத்திக்கு ஒரு கணவனோ இல்லை என்பது கூடுதல் அம்சம்.
காசு வாங்கி கொண்டு கள்ள ஒட்டு முதல் நல்ல ஒட்டு வரை போட்டு முடிந்தவரை ஜனநாயகத்தை காப்பாற்ற முயல்வது.
தலைவன் நடித்த திரை படம் வெளி வந்தால் தோரணம் கட்டி பீர் நீராட்டு, பால் நீராட்டு, கற்புரம் காட்டி வழிபாடு செய்வது போன்ற பல புண்ணிய காரியங்கள் செய்வது மற்றும் அதற்காக தலைமை மன்றத்துக்கு மனு போட்டு பதிவு செய்து கொள்வது. (உதாரணம் : பலான பலான ரசிகர் மன்றம் , பதிவு எண : 45௬௭ / ௯௬). கொஞ்ச நாட்கள் கழித்து தலைவர் அரசியலுக்கு வர வேண்டுமென்று இதே ரசிகர் மன்றத்தில் தீர்மானம் போடுவது, சித்திரை திருவிழாவை முன்னிட்டு காசு வசூல் பண்ணி பக்தர்களை வரவேற்று ரசிகர் மன்றம் சார்பில் போஸ்டர் ஓட்டுவது, அம்மனுக்கு கூழ் ஊற்றுவது இவையெல்லாம் முக்கிய கடமைகள்.

இவ்வளவு பணிகளுக்கு இடையில் ஈழ தமிழர் பற்றி நினைக்க அவனுக்கு நேரம் எப்படி கிடைக்க அவன் என்ன கலைஞரா?

எவன் எக்கேடு கேட்டு போனால் எனக்கு என்ன?. மானமுள்ள தமிழன் ஒன்று தீ குளித்து மாண்டு போகிறான் அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி சிறைக்கு போகிறான். பாதி தமிழன் தமிழ் நாளேடுகளை பார்ப்பதே இல்லை (தமிழ் நாளேடு படிப்பது இழுக்கு) அல்லது
நாளேடு பார்க்கும் பழக்கமே இல்லை.

வழக்கு அறிஞர்கள் மட்டும் விடாது இந்த பிரச்சினை பற்றி போராட்டம் நடத்தி கொண்டு இருந்தனர். தமிழின காவலர் அய்யா கலைஞர் அவர்களால் அதுவும் திசை மாற்றப்பட்டு விட்டது. எதை வைத்து கொண்டு நாம் இதை தாய் தமிழகம் என்று சொல்லுகிறோம் என்பது மட்டும் புரியவில்லை. வேண்டுமானால் மாற்றான் தாய் தமிழகம் எனலாம்.

நானும் ஒரு அடிமை......

"ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன உதவி செய்திட முடியும் "என்று சொன்னராம் பெரியார் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு உதவிட கூறி வந்த அமிர்தலிங்கத்திடம். என்னோவொரு சத்யமான உண்மை.? பல ஆயிர கணக்கானமக்கள் வெறும் இருபது முன்று சதுர கிலோ மீற்றுக்குள் சுருங்கி உணவுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் எதிர் பார்த்து கிடக்கையில், வெறும் கையை பிசைந்து கிடக்கும் எங்களின் நிலையை விளக்க இதைவிட ஒரு விளக்கம் தேவை இல்லை. இதற்கு மேலே சொன்னால் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவன் ஆகி விட கூடும்.
நேற்று முன்தினம் இந்தியராணுவத்தில் பணிபுரியும் என்னுடைய நண்பன் ஒருவன் பேசிக்கொண்டு இருக்கையில், அவன் சொன்ன செய்தி என்னை மேலும் கவலைக்கு உள்ளாகியது. இந்திய ராணுவ வீரர்கள் இலங்கையில் சண்டை இடுவது உண்மை என்றும் , அந்த படையில் ஒரு தெனிந்தியா வீரன் கூட இடம் பெறாமல் மிகவும் கவனமாக தேர்வு செய்து உள்ளதும் தெரிய வந்து உள்ளது. புலிகளின் ஒவ்வொரு அசைவும் ஆளில்லா விமானகள் மூலம் கண்காணிக்க படுவதாகவும் தெரிகிறது. பொன்சோக தந்து உள்ள அறிக்கையில் சொல்லி இருக்கிறான் " தமிழ் ஈழ கனவு பலிக்க போவது இல்லை. புலிகள் முற்றோடு அளிக்க படுவார்கள். எங்களிடம் வரும் தமிழக மக்களுக்கு அன்பும், அரவணைப்பும் உண்டு என்று". அந்த அன்பும் அரவணைப்பும் வேறு ஒன்றும் இல்லை பட்டினி சாவுகளும், சித்திரைவதைகளுமே தவிர வேறு ஒன்றும் இல்லை. சிங்கம் சைவம் ஆகி விட்டது என்று சொன்னால் யார் நம்புவர்?
இலங்கைக்கு ராணுவ உதவி செய்யும் இந்தியாவின் நோக்கம் எதுவாக இருக்க கூடும்?
ராஜிவின் கொலைக்கு பழி தீர்த்தல் மற்றும் மால்தீவை போல சிறிலங்காவையும் தனது கட்டுக்குள் இதன் மூலம் கொண்டுவந்து, இந்த பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட. இதை அறிந்துதான் பல சிங்கள அமைப்புகள் இன்னும் இந்தியாவை எதிர்த்து தொடர்ந்து கூச்சல் போடுகின்றது.
இந்தியாவின் ஆசைகளுக்கு தமிழ் இனம் இங்கே பலி கடா ஆக்கப்பட்டு இருப்பதுதான் வேதனை அளிக்க கூடிய விஷயம். அங்கே எவன் செத்தாலும் கவலை இல்லை. நான் ஊகித்தவரையில் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் சர்க்கரை தடவி தமிழக தலைவர்களுக்கு கீழ் கண்டவாறு சொல்ல பட்டு இருக்கலாம்.
இந்த போரின் பின் முற்றாக புலிகளின் ஆதிக்கம் அளிக்க பட்டு விடும்,
அதன் பின் இலங்கை இந்தியா சொன்ன படி ஆட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டுவிடும். பிறகு தமிழர்களுக்கு சுய ஆட்சி அல்லது சம உரிமை வாங்கி தருவதில் எந்த இடயுரும் இருக்க போவது இல்லை.
புலிகள் அந்த பிரதேசத்தில் இருக்கும் வரை இது நடக்க போவதும் இல்லை.
கடந்த சில மாதங்களாக கருணாநிதியும், தமிழக காங்கிரஸ் அமைச்சர்களும் விடும் அறிக்கைகளை கூர்ந்து கவனித்தால் இது விளங்க கூடும்.
எது எப்படி ஆகினும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிவு தெரிந்து விட கூடும். பொறுத்து இருந்து பார்ப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.

ஒரு "ஒ" போடுங்க....

தேர்தலின் உச்ச கட்ட நகை சுவை காட்சிகள் அரங்கேற்றம் ஆரம்பம் அகி விட்டது.

ஒன்று : சிறீலங்காவில் போர் நிறுத்தம் கோரி தமிழக முதல்வர் சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங் ஆகியோருக்கு தந்தி அனுப்பி உள்ளார். நிருபர் ஒருவரிடம் நேற்று செருப்படி வாங்கிய சிதம்பரத்தை தொலை பேசியில் நலம் விசாரித்தார். இன்றைய திகதியில் இதைவிட ஒரு காமெடி இருக்க முடியாது. வழக்கமாக கடிதம் எழுதும் அவர் பிரச்சினையின் தீவிரம் அறிந்து தந்தி அனுப்பி இருக்கிறார். என்னே கருணை. அந்த தந்தி அவர்கள் வீட்டு குப்பை தொட்டிக்கு கூட போகாது. தமிழக அரசியல் வியாபர தலைகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து ஈழ தமிழர்கலைவைத்து அரசியல் காமெடி செய்வதை விட்டு விடுங்கள். உங்கள் மீதான நம்பிக்கைகளை அவர்கள் இழந்து நாட்கள் பல ஆகிவிட்டது.

இரண்டு: முன்னாள்பிரதமர் இந்திரா கொலை செய்ய பட்ட போது சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டியதாக ஜகதிஷ் டைட்லர் மீது குற்றம் சாட்ட பட்டு இருந்தது. ஜகதிஷ் டைட்லர் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது, சீக்கியர்களுக்கு பெரும் கோபத்தை கொடுத்தது. அதே இனத்தை சேர்ந்த மன்மோகன் பிரதமராக இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு. இதில் மன்மோகன் சிங்கை குற்றம் சொல்லி பலன் இல்லை.
மன்மோகன் சிங் ஒரு பிள்ளை பூச்சி. சோனியா சொன்னபடி ஆடி கொண்டு இருக்கிறார். சுருங்க சொன்னால் அவர் சோனியாவுக்கு கிடைத்த பன்னீர் செல்வம். அவ்வளவே..

இதற்கு இடையில் சிங்கள கட்டு மிராண்டி அரசு, புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கி இருக்கும் தமிழர்கள் மீது நச்சு வாயு குண்டுகளை ஏவி கொள்ளல கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையை அளிக்க கூடியதாக இருக்கிறது. லண்டன்-ல் கடந்த இரண்டு நாட்களாக தமிழர்கள் நடத்தும் போராட்டம் ஏதேனும் பலன் அளிக்குமா என்று தெரியவில்லை. அந்த போராட்டங்களில் தமிழ்நாட்டு தமிழர்களும் கலந்து கொள்கிறார்களா என்ன? எனக்கு என்னவோ இன்னும் அந்த சந்தேகம் இருக்கிறது.சீமான் மற்றும் அய்யா நெடுமாறன் தவிர வேறு எவரும் தொடர் போராட்டத்தில் இறங்கி இருப்பதாக தெரியவில்லை. எங்கே போனார்கள் தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகள்? சாதி சங்க தலைவர்கள்?.

நான் கவலை கொள்வது எல்லாம், தமிழ் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியதுதான். இனி அந்த குழந்தைகளின் பள்ளி வாழ்கை என்பது ஒரு முடிந்து போன கதை. லங்கன் அரசு ஏற்பாடு செய்ய போகிற புனரமைப்பு பணிகள் ஒரு மயிரையும் புடுங்க போவதில்லை. அவர்கள் படிப்பு அறிவு அற்றவர்களாக, தற்குறி வாழ்கையில் இன்னல் பட போவதை நானும் ஒரு மௌன சாட்சியாக இருந்து பார்த்து கொண்டு இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்படி ஏதேனும் முயற்சி இருப்பின் என்னையும் நண்பர்கள் இணைத்து கொண்டால், அதைவிட வேறு ஒன்றும் பெரிய மகிழ்ச்சி இருக்க போவதில்லை.

தமிழ் இனம் கூண்டு அழிந்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் பாரளுமன்ற தேர்தலுக்காக நாடகம் ஆடிக்கொண்டு இருக்கும் இந்த கொடுஞ்செயல் அரசியல் வியாபாரிகளை கண்டித்து இந்த தேர்தலில் என்னுடைய வாக்கு எந்த "நாய்" -க்கும் கிடையாது. நாற்பது ஒன்பது "ஒ" -ல் போட போகிறேன்......




அண்மையில் நான் வலைமனையில் பார்த்த புகைப்படம் ஒன்று எனது இரவு தூக்கத்தை
தொலைக்க காரணமாக அமைந்துவிட்டது. கீழே ஒரு குழந்தை இறந்து கிடக்க, கூப்பாடு போட்டு அழுகிறாள் தாய். மடியில் மற்றொரு குழந்தை முளை காம்பில் வாய் வைத்து சப்பிகொண்டு இருக்கும் காட்சி அது. எவ்வளவு கொடுரங்களை அந்த குழந்தை பார்த்து இருந்தால், தாய் அழும்
வேளையிலும் பாலுக்காக முலைகாம்பை தேட முடியும?

இதோ எனது எல்லையிலிருந்து வெறும் ஐம்பதுகிலோ மீட்டர்-க்கும் குறைவான தூரத்தில் எனது பாட்டனும், பூட்டனும்இருந்த தேசத்தில் எனது உறவுகள் கஞ்சிக்காக அலையும் வேலையில் காண சகிக்க வில்லை. எவ்வளவு நாள் தொடரும் இந்த அவலம்? என்ன இந்த குழந்தைகளின் எதிர்காலம்?

என்ன செய்ய வேண்டும் நாம்?

நான் எதிர்பார்த்து போலவே நடந்து விட்டது. இந்தியா பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடை பெறவுள்ளது. தேர்தலை ஒட்டி ஜெயலலிதாவுக்கும் தமிழ்நாட்டு கருணாவுக்கும் ஈழ தமிழர் பிரச்சனை நினைவு வந்து இருக்கிறது. வாக்காளர்கள் வழக்கம் போல் பண மழையை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள். சீமானையும் அரசியலுக்குள் இழுக்க சிலர் முயற்சிப்பதாக தெரிகிறது. தேர்தல் முடிந்தவுடன் ஈழ தமிழர் பிரச்சனை மறக்கடிக்க பட்டு விடும் அல்லது மறக்கப்படும்.

புலி எதிர்பாளர்கள் தங்கள் மன நிலையை மாற்றிகொள்வது நல்லது. விடுதலை புலிகளின் ஈழத்தில் என்ன குறை கண்டீர் நீங்கள் ? எனக்கு தெரிந்த வரை சட்டம் ஒழுங்கு நேர்த்தியாக இருந்தது. காவல் நிலையத்தில் கன்னி பெண்கள் கற்பழிக்க படவில்லை. காவலர்கள் அங்கே சீருடை இல்லாமல் வந்து ஆள் கடத்தலில் ஈடு படவில்லை. வழக்காடு மன்றங்களில் முட்டைகள் வீசப்படவில்லை. வங்கிகள் செயல் பாடு திருப்தி கரமாக இருந்தது. ட்சுனாமி கோர தாண்டவத்தின் பொது ஈழ காவல் படையின் பணி சிறப்பாகவே இருந்து இருக்கிறது. கொள்கை, அமைச்சு, படை வேறு என்ன வேண்டும் ஒரு அரசாங்கம் நடத்த. ஒரு நாடு முழுமை அடைய.

என்னை பொறுத்தவரை இது ஈழம் என்கிற நாட்டின் மீது, ஸ்ரீலங்கா என்னும் நாடு தொடுத்து இருக்கும் வம்பு போர் இது. ஈழத்தின் தூதரகம் எந்த ஒரு அண்டை நாட்டிலும் இல்லை என்பதை தவிர ஒரு தனி நாட்டுக்கு உரிய எல்லா அம்சமும் ஈழத்துக்கு இருந்து இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை விட ஈழ அரசு நல்லதொரு ஆட்சியை மக்களுக்கு வழங்கி இருக்கிறது.

பாரதிதாசன் சொன்னது போல் " சுக்கா மிளகா சுதந்திரம்?". யார் அவன் நமக்கு சுதந்திரம் கொடுக்க? நாம் ஒன்றும் அவனிடம் பிச்சை எடுக்க தேவை இல்லை. என்னை பொறுத்த வரை ஈழம் என்றோ மலர்ந்து விட்டது.

நம்முடைய இன்றைய தேவை என்ன? எதாவது ஒரு நாடு நம்மை அங்கீகரிக்க வேண்டும். கண்டிப்பாக அது இந்தியா-ஆக இருக்க போவதில்லை. அதற்கான ஆவணங்களை செய்யும் என் சொந்தங்களே. நாளை மலர போவதில்லை நமது ஈழம். அது மலர்ந்து நாட்கள் பல ஆகிவிட்டது. நமது பொறுப்பு அதை கட்டி காப்பதுவும் அதற்கான அங்கிகாரம் பெற்று தருவதும் ஆகும்.

நமக்கென ஒரு நாடு .அங்கு தமிழ் ஆட்சி மொழி. கேட்கவே சந்தோசமாக இல்லை?..... ஈழ தமிழ் நாட்டில் நானும் ஒரு விருந்தாளியாக சென்று வரும் நாளை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். கருணாவை சிறையில் சந்திக்க விரும்புகிறேன் உயிரோடு இருந்தால்!!!!.

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அரங்கேறும் நகை சுவை நாடகங்கள்.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண கூறி மீண்டும் ஒருவர் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இருக்கிறார். நினைத்தாலே பெரும் துன்பத்தை தருவதாக இருக்கிறது.
அவருக்கு இரண்டு வயதுக்கும் குறைவான வயதுடைய மகனும், இளம் மனைவியும் இருப்பது தெரிய வந்துள்ளது. எனக்கு இந்த மாதிரியான தற்கொலை முயற்சிகளில் உடன்பாடு இல்லை. தமிழன் தற்கொலை பண்ணி கொள்ளவா பிறந்தான்?. முடிந்தால் இரண்டு எதிரியின் உயிரை எடு.
"பிறந்த குழந்தை இறந்து பிறந்தால், வாளால் கீறி புதைப்போம் " - என சும்மா பாடி கொண்டு இருந்தால் போதாது.

அங்கே தமிழச்சிகள் நூற்று கணக்கில் தாலி அறுத்து கொண்டு இருக்கையில், ஜெயலலிதா அம்மணி அவரது அறுபது ஒன்றாவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய கட்சி தொண்டரடி ஆழ்வார்கள் ஏற்பாடு செய்த விழாவில் அறுபத்தி ஒன்று ஜோடி -க்கு திருமணம் செய்து வைக்கிறார். நாடு எப்படி நாசமாக போனால் என்ன?

இந்த காமெடி-க்கு இடையில் , இலங்கை தமிழர் நல உரிமை (?) அமைப்பு, சோனியா காந்தியை சந்தித்து மூன்று கோரிக்கைகளை வைத்து உள்ளது.
ஒன்று : பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு இணையான அந்தஸ்து அளிக்க பட வேண்டும. அதுக்கு சோனியா இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
இரண்டு :ஐ.நா. படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் ( இவங்க போனது போதவில்லை என நினைக்கிறேன்)
மூன்று : இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் ( ஆயுத தடை பற்றி கவலை இல்லை)

பொறுங்கள் இனிமேல்தான் காமெடி ஆரம்பிக்கிறது. சோனியாவின் பதில் என்ன தெரியுமா? இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலை இடாது. எனவே இது பற்றி பிரணாப் -எடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எப்படி போகிறது கதை.


http://www.nitharsanam.com/?art=27241
http://www.nitharsanam.com/?art=27232
http://www.nitharsanam.com/?art=27240





"நெஞ்சு பொறுக்குதில்லையே -
இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்".
நிஜமாகவே நெஞ்சம் பொறுக்குதில்லை. என்னதான் நடக்குது இலங்கை-யில். அதை விட வேடிக்கை தமிழ் நாட்டில் நடப்பதுதான். தங்கபாலு சூளுரைக்கிறார் " இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம், சோனியாவின் படங்களை கொளுத்தினால்". எப்படி இருக்கிறது கதை? அது சரி மானம் கெட்ட தமிழ்நாடு காங்கிரஸ்க்கு தமிழன் கொளுத்தப்பட்டால் கவலை இல்லை.. ஆனால் அன்னை சோனியாஜி புகை படம் முக்கியம். அவர்களை பொறுத்த வரை புலி எதிர்ப்பு முக்கியம்.
காங்கிரஸ் -இ பொறுத்தவரை புலிகள் வேறு, ஸ்ரீலங்கா தமிழன் வேறு. புலிகள் தமிழனே இல்லை. ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.. இதைவிட பெரிய காமெடி இந்த உலகத்தில் இல்லை.. இதை சொல்லும் எவனும் ஒரு தடவை கூட அகதி முகம் பக்கம் தலை வச்சு படுத்து இருக்க மாட்டன். அது திறந்தவெளி சிறை தவிர வேறு ஒன்றும் இல்லை. என்ன ஒரே ஒரு வித்தியாசம். ஸ்ரீலங்கா ஆர்மி விட்டு வச்சு இருந்தா பிள்ளை குட்டி உடன் இருக்கலாம். தப்பி தவறி கூட வெளியில் வந்து விட கூடாது. அப்படி வந்திட்டா நீ விடுதலை புலி. என்ன ஒரு கண்டு புடிப்பு. இந்தியா துணை கண்டதை சுத்தி பாகிஸ்தான், நேபால்,சீனா, பர்மா, பங்களாதேஷ் என ஏகப்பட்ட நாடுகள். enguம aகதி முகாம் இல்லை. அப்படி என்றால் அந்த நாடுகளில் இருந்து எவரும் இந்தியா உள்ளே வருவது இல்லையா?. விபசாரத்துக்கு பங்களாதேஷ், நேபால் -ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எல்லை தாண்டும் மக்களின் அளவுக்கு கணக்கு எதுவும் இல்லை. கண்டு கொள்ள படுவது இல்லை.
எனக்கு ஒன்று மட்டும் விளங்க வில்லை. எங்கே போனார்கள் ஹிந்து மத காப்பாளர்கள்?. புத்த மதத்தை சேர்ந்தவன் என்பதுக்காக சீனா-வும், ஜப்பான் -உம் ஸ்ரீலங்கா அரசை ஆதரிக்கிறது. அப்படி எனில் தமிழன் ஹிந்து இல்லையா? எனில் அவன் தனி ஒரு மதமா?.
இதை எல்லாம் சொன்னால் அவன் இந்தியா இறையாண்மை -க்கு எதிரானவன். இந்தியா அரசுக்கு என்னை பொறுத்தவரை "இறை" தன்மையும் இல்லை, ஆண்மையும் இல்லை.
இது இப்படி இருக்க , தமிழ்நாட்டு கருணாவின் ( ஆம். கருணாநிதி தான்) பேச்சு வேறு என்னை மேலும் கடுப்பு அடைய செய்கிறது. ஸ்ரீலங்கா தமிழருகாக இரண்டு முறை ஆட்சி-யை தியாகம் செய்தாராம். நான் சென்ற மாதம் வரை தி.மு.க. ஆதரவாளன் . அவர் ஒன்றும் தியாகம் செய்ய வில்லை. விடுதலி புலிகளை காரணம் காட்டி அவரிடம் இருந்து ஆட்சி புடுங்கப்பட்டது என்பதே உண்மை.
ஜெயலலிதா பற்றி நாம் சொல்லவே தேவை இல்லை. அந்த அம்மணிக்கு சசிகலா நல்ல இருந்தாலே போதும். எவன் செத்தால் அவளுக்கு என்ன?

அய்யா ராமதாஸ் தைலாபுரத்தில் உக்கார்ந்து கொண்டு தனி கதை சொல்லுகிறார். அன்புமணி ராமதாஸ் என்ன பண்ணுகிறார்? மத்திய அரசு நடவடிக்கை புடிக்கவில்லை எனில் பதவி விலக வேண்டியதுதானே?

காணாமல் போனவர்கள் பட்டியல் அதிகம். எனக்கு தெரிஞ்சு எதையும் எதிர் பார்க்காமல் போராட்டம் செய்து கொண்டு இருப்பவர் இரண்டு பேர் மட்டுமே. ஒன்று நெடுமாறன் , மற்றொருவர் சீமான்.

சீமான் நிலை என்ன ஆக கூடும்? தமிழ்நாட்டு காவல் துறை அவர் மீது மேலும் மேலும் வழக்குகள் போட்டு அலைகழிக்க கூடும். வேலூர்-ல் ஒரு வழக்கு. பாண்டி-ல ஒரு வழக்கு என திசைக்கு ஒரு நாள் என "வாய்தா" போட கூடும்.

வேற என்ன சொல்ல.. இந்தியன்-ன்னு சொல்லவே வெக்கமா இருக்கு. என்னோட கையாலாகாத தனத்தை நினைத்து வெக்க பட மட்டுமே முடியுது..

 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies